திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'ஒன்றிய அரசு தேர்தல் வரப்போகும் சமயத்தில் இது போன்று மத்திய அமைப்புகளை தமிழகத்திற்கு அனுப்பி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கட்டமைப்புகளை குறை சொல்வது சரியல்ல'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகளில் அங்கீகாரம் ரத்தானது அதிர்ச்சியளிக்கிறது. சுகாதாரத் துறையின் செயல்பாடு இதேபோல் நீடித்தால் மேலும் சில மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்தாக வாய்ப்புள்ளது. மாணவர்களை பாதிக்காத வகையில் மூன்று கல்லூரிகளுக்கும் அனுமதிபெற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 2022-ல் மருத்துவ கலந்தாய்வில் ஆறு இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தது வேதனைக்குரியது''என்றார்.