அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கனூர் கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோயெதிர்ப்பு சக்தியினைப் பெருக்கும் வகையில் முருங்கைக் கீரை சூப் தயாரித்து இளைஞர்கள் கிராமத்தில் உள்ள 3000 பேருக்கும் வீடு வீடாகச் சென்று மூலிகை சூப் வழங்கினர். இந்த மூலிகை சூப்பில் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் வகையில் அதிக சத்து கொண்ட முருங்கைக் கீரை, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், மஞ்சள் தூள், உப்பு கலந்து கொதிக்க வைத்து வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டது.
வெங்கனூர் கிராமத்து இளைஞர்களின் மூலிகை சூப் வழங்கும் செயல்பாடுகள் கிராம மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவச் சங்க செயலாளர் தங்க சண்முக சுந்தரம், இயற்கை மருத்துவர் பழனி மற்றும் வெங்கனூர் கிராம பஞ்சாயத்து தலைவர் கருணாநிதி, துணைத் தலைவர் இளங்கோவன் அறம் இளைஞர்கள் நற்பணி இயக்க இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொரோனா தடுப்பு பணியில் அயராது பாடுபட்டு வரும் காவலர்கள், மருத்துவர்களுக்கும், அஞ்சலக ஊழியர்களுக்கும் மூலிகை சூப் வழங்கப்பட்டது.