வெள்ளி கால் கொலுசு, கை செயின், கழுத்தணிகள், மோதிரம், பாத்திரங்கள் என வெள்ளி பொருள்களுக்கு சேலம் மாவட்டம் மிகப்பெரும் சந்தையாக விளங்குகிறது. இங்கு உற்பத்தியாகும் கால் கொலுசுகள், உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சேலம் மாநகரம், புறநகர் பகுதிகளில் மட்டும் ஒரு லட்சம் குடும்பங்கள் வெள்ளி தொழிலில் ஈடுபட்டுள்ளன.
கரோனா ஊரடங்கு காரணமாக, வெளி நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய கச்சா வெள்ளி, தங்கம் வரத்தில் கடும் சரிவு ஏற்பட்டது. இதனால் நாளொன்றுக்கு இரண்டு டன் வரை வெள்ளி பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கையிருப்பில் உள்ள வெள்ளியைக் கொண்டே கொலுசு உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதுமட்டுமின்றி, தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் கடந்த ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் கடுமையாக ஏற்றம் கண்டன. இந்த விலையேற்றமும் இத்தொழிலில் சற்று தொய்வை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளி 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், தற்போது 69 ஆயிரம் ரூபாயாக சரிந்துள்ளது. அதாவது ஒரு கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. விலை குறைவால் மீண்டும் கொலுசு உற்பத்தி சூடுபிடிக்க வாய்ப்புள்ளதாக வெள்ளி வியாபாரிகள் கூறினர்.