ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட 21 ஆற்காடு தெத்து தெரு மற்றும் 23 இந்திரா நகர் ஆகிய இரண்டு வார்டுகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். ஆனால் இதுநாள் வரை தங்கள் வசித்து வரும் இடங்களுக்கு பட்டா போன்ற முறையான ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து சுமார் 40 ஆண்டு காலமாக மாவட்ட நிர்வாகத்திடம் வீட்டுமனை பட்டா கோரி பலமுறை நடையாய் நடந்து கோரிக்கை மனுக்களை அளித்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி பொதுமக்கள் ஆவேசத்தோடு குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான குடியிருப்பு வாசிகள் பெண்கள் ஆண்கள் வயதானவர்கள் என அனைவரும் ஒன்றாக கூடி இனிவரும் காலங்களில் எங்கள் கோரிக்கை மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தங்களுடைய இந்திய குடியுரிமைக்கான அடையாளமான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேர்தல் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை திருப்பி ஒப்படைப்போம் எனச்சொல்லி அதனை சாலையில் போட்டு கண்டன கோஷங்களை வெளிப்படுத்தினர்.
மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படும் என கூறியதோடு நாங்கள் இங்கே வாழ்வதற்கு தகுதி இல்லை என நினைத்து பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கேன்களை கையில் வைத்துக்கொண்டு உடலின் மீது ஊத்தி கொண்டு உயிரை மாய்த்துக்கொள்வோம் என மாவட்ட நிர்வாகத்திற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.