நடிகர் விவேக்குக்கு இன்று (16/04/2021) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 'எக்மோ' கருவி மூலம் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதாக திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் 'சின்னக் கலைவாணர்' நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் விவேக் விரைவில் பூரண நலம்பெற வாழ்த்துகிறேன். தனது திறனால் லட்சோப லட்சம் பேரை மகிழ்வித்து வந்த அவரது பணி மீண்டும் தொடர்ந்திட பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.