திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசா விடுத்த சவாலை நான் ஏற்றுக்கொண்டு அவருடன் விவாதிக்க தான் தாயாராக இருப்பதாக ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் ஜோதி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக ஊழல் கட்சி என்றும், தமிழக அரசை பற்றி பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை என்றும், சர்க்காரியா கமிஷனில் திமுக விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்துள்ளதாக கூறியுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தரப்பில் ஆ.ராசா காட்டமாக பதிலடி தந்திருந்தார்.
"தமிழக முதல்வருக்கு ஆண்மை இருந்தால், திராணி இருந்தால் என்னோடு நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா? ஊழலை உங்கள் அம்மா (ஜெயலலிதா) செய்தாரா அல்லது நாங்கள் செய்தோமா என்பதை பேசி தீர்த்துக்கொள்வோம். களத்தை முதல்வர் சொல்லட்டும், தனி ஆளாக நான் வருகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் ஜோதி "திமுக எம்.பி ஆ.ராசா விடுத்த சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன், என்னோடு அவர் விவாதிக்க வேண்டும். ஏனென்றால் அந்த வழக்கை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அரசியலைப்பு சட்டத்தை ஜெயலலிதா மீறியவர் என்றோ அல்லது ‘கொள்ளைக்காரி’ என்றோ தீர்ப்பில் ஒரு இடத்தில் கூட கூறிப்பிடவில்லை. பிரிவு 394ன் படி அவர் குற்றமற்றவர். இறப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தால் அவர் பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கும்" என்றார்.