திருவண்ணாமலை மாவட்டம், ஜம்னாமத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 7 கவுன்சிலர் வார்டுகள். இதில் 3 வார்டுகளில் அதிமுகவும், 2 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் தேமுதிகவும், 1 வார்டில் சுயேட்சையும் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக வெற்றி பெற்றவர் திமுகவில் இணைந்துவிட்டார். அப்படியிருந்தும் அதிமுக, தேமுதிக ஆதரவுடன் 4 கவுன்சிலர்கள் என முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காளி என்கிற கவுன்சிலர், தனக்கு துணைசேர்மன் பதவி வேண்டும் எனக்கேட்டு, அதை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் மறுத்ததால் தலைமறைவாகிவிட்டார். திமுகவினர் தான் கடத்திவிட்டார்கள் என அதிமுக ஜம்னாமத்தூர் ஒ.செ வெள்ளையன் குற்றம்சாட்டினார். இவரது மகள் ஜீவா தான் சேர்மன் கேண்டிடேட் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 6ந்தேதி காலை ஜம்னாமத்தூர் கோவிலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெற்றி பெற்றவர்கள் பதவி பிரமாணம் செய்துக்கொண்டனர். பதவியேற்புக்கு வந்த கவுன்சிலர் காளியை, வெள்ளையன் ஆட்கள் தாக்க முயன்றனர். அதேநேரத்தில் திமுகவினர் அவரை பாதுகாத்தனர். அவரை போலீஸார் பாதுகாப்பாக பதவியேற்க வைத்து அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கவுன்சிலர் காளி தரப்பு, என்னை அதிமுகவும் இழுக்குது, திமுகவும் இழுக்குது. நான் இரண்டு பக்கத்தில் யார் பக்கம் போகனும்கிறதை அமைச்சரும், கலெக்டரும் சொல்லச்சொல்லுங்க கேட்டுக்குறன். மத்தப்படி நான் சுயேட்சை. என் உயிருக்கு பாதுகாப்பில்லை அதனால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதனை காவல்துறையினருக்கும் கோரிக்கையாக எழுதி தந்தார். அதனால் கவுன்சிலர் காளி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திமுக, அதிமுக இரண்டு தரப்பும் விடாமல் காளியிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
வரும் ஜனவரி 11ந்தேதி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குள் காளியை தங்கள் பக்கம் முழுமையாக இழுத்துவிட வேண்டும் என திமுக, அதிமுக இரண்டும் முட்டி மோதிக்கொண்டுள்ளன.