சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில், ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
இந்த விழாவில் ரஜினிகாந்த், ‘ஹூக்கும்’ பாடலில் இடம்பெற்ற ‘பட்டத்தை பறிக்க நாலு பேரு’ வரியை குறிப்பிட்டு சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி பேசியிருந்தார். அதில் அவர், “காட்டுல சின்ன மிருகங்கள் எப்பவும் பெரிய மிருகங்களை தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும். உதாரணத்துக்கு காக்கா எப்பவும் பருந்தை சீண்டிக்கிட்டே இருக்கும். ஆனா, பருந்து எப்பவும் அமைதியா இருக்கும். பறக்கும் போது பருந்தை பார்த்து காக்கா உயரமா பறக்க நினைக்கும். இருந்தாலும் காக்காவால அது முடியாது. ஆனா, பருந்து இறக்கையை கூட ஆட்டாம எட்ட முடியாத உயரத்துல பறந்துக்கிட்டே இருக்கும். சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பிரச்சனை இப்ப இல்ல 1977லயே ஆரம்பிச்சிருச்சு. அதனால சூப்பர் ஸ்டார் பட்டம் வேணாம்னு சொன்னேன். ஆனா, ரஜினி பயந்துட்டாருன்னு சொன்னாங்க. நாம பயப்படுறது ரெண்டே பேருக்குதான். ஒன்னு அந்த பரம்பொருள் கடவுளுக்கு. இன்னொன்னு நல்லவங்களுக்கு. மற்றபடி யாருக்கும் பயப்படுறதில்ல” என்று பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவியது. குறிப்பாக காகம் என்று விஜய்யைத் தான் குறிப்பிட்டு ரஜினி சொல்கிறார் என்று பரவலாகப் பேசப்பட்டது.
இதனால் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் பனிப்போர் நடந்து வருகிறது. யார் சூப்பர் ஸ்டார்; யார் காகம்; யார் கழுகு என ஒவ்வொரு தரப்பு ரசிகர்களும் மீம்ஸ், போஸ்டர், வீடியோ எனப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த இயக்குநர் சேரனிடம், யூடியூப் செய்தியாளர்கள் சிலர் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். “நான் தமிழ்நாட்டிலேயே இல்ல” எனப் பதிலளித்துக் கொண்டே நடந்த சேரனிடம், விடாப்பிடியாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பின்னர் பதிலளித்த சேரன், ''நான் யார் இதை சொல்றதுக்கு. நான் இவங்க ரெண்டு பேரையும் வச்சு படம் பண்ணல. நான் ரசிகன் தான். எனக்கு என் பொழப்பு முக்கியம். யார் சூப்பர் ஸ்டார் என்பது எனக்கு முக்கியமில்ல'' என்றார்.