மூன்று மாதங்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்று வந்த மீனவர்கள் பிடித்துவந்த மீனை விற்க முடியாமல், வாங்க ஆளில்லாமல் தவிப்பது மேலும் அவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டதுதான் காரணம் என மீனவர்கள் வேதனை அடைகின்றனர்.
மீன்பிடி தடைக்காலம், கரோனா ஊரடங்கு என அடுத்தடுத்த காரணங்களால் சுமார் மூன்று மாதங்களாக கடலுக்குச் செல்லாமல் முடங்கிக் கிடந்த மீனவர்கள் கடந்த வாரம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதில் பெரும்பாலான படகுகள் காலை கரை திரும்பியது. மீனவர்கள் பிடித்துவந்த மீன்களை வாங்க மிகக் குறைந்த அளவிலேயே உள்ளூர் வியாபாரிகளும், பொதுமக்களும் மட்டுமே நாகை துறைமுகத்தில் குழுமியிருந்தனர். அதேவேளையில் வெளியூர், வெளிமாவட்ட, வெளிமாநில மீன்வியாபாரிகள் வரவில்லை, அதற்குக் காரணம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் வாங்க வேண்டும் என்கிற அறிவிப்புதான் என்கிறார்கள் மீனவர்கள்.
இதுகுறித்து மீனவர் சங்க தலைவர்களுள் ஒருவரான அக்கரைப்பேட்டை மனோகரன் கூறுகையில், "சுமார் 90 நாட்களுக்கு பிறகு கடலுக்குச் சென்று வந்துள்ளோம், கடலில் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த மீன்களைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டோம். ஊரடங்கு கட்டமைப்பால் நாகை மாவட்டத்திற்கு வெளிமாவட்ட, வெளிமாநில மீனவர்கள் மீன் வியாபாரிகள் வரமுடியாத சூழ்நிலையில் வியாபாரம் மோசமாகிவிட்டது. நாகையில் இருந்து வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதியும் செய்ய முடியவில்லை. பெரிய விசைப்படகுகளில் ஒரு முறை மீன் பிடிக்க செல்ல மூன்று லட்சம் வேண்டும், அதேபோல சிறிய படகுகளில் செல்ல இரண்டு லட்சம் செலவாகும். வெளிமாநில, வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால் விற்பனை பாதிக்கப்பட்டுவிட்டது.
மீன்களின் விலையும் சரிந்துள்ளது. கிலோ 800 ரூபாய்க்கு விற்ற வஞ்சரம் வெறும் 450 க்கு விற்கிறது. கானாங்கெளுத்தி 130க்கு விலை போகிறது. செலவு செய்த பணத்திற்குக் கூட ஏலம் போகவில்லை. நாகப்பட்டினத்தில் மட்டும் இரண்டரை கோடி மதிப்புள்ள மீன்களைக் கொண்டு வந்தோம் இதில் பாதி அளவு கூட விற்கவில்லை." என்கிறார் வேதனையுடன்.