காஞ்சிபுரத்தில் அரசுப் பள்ளியில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த நபர்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் இதேபோல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தற்போது வரை தீர்வு கிடைக்காமல் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் மற்ற சில பகுதிகளிலும் இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அண்மையில் திருவள்ளூரில் மத்தூர் பகுதியில் பள்ளியின் பூட்டில் மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட சிறுபினாயூர் என்ற கிராமம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள திருவந்தார் என்ற இடத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த பொழுது குடிநீர் தொட்டியில் இருந்த நீரை மாணவர்கள் அருந்தியுள்ளனர். சமைப்பதற்காகவும் அந்த தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த நீரில் இந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து தொட்டியை பார்த்தபோது அதில் மனிதக் கழிவு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி நிர்வாகம் புகார் அளித்த நிலையில், டிஎஸ்பி ஜுலியர் சீசர் மற்றும் ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். தொட்டியில் உள்ள நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.