நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசுகையில், “இந்த அரசியல் எல்லாம் நமக்கு எதுக்கு, நடித்தோமா, நாலு காசு பார்த்தோமா என்று தான் ஆரம்பத்தில் நான் நினைத்தேன். ஆனால் நான் மட்டும் நல்லா இருப்பது சுயநலம் இல்லையா. நம்மை வாழ வைத்த இந்த மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டாமா. ஒரு லெவலுக்கு மேல் காசு சேர்த்து என்ன செய்யப் போகிறோம். இந்த வாழ்க்கையை நமக்குக் கொடுத்த மக்களுக்கு என்னதான் செய்யப் போகிறோம். இது போன்று ஏகப்பட்ட கேள்விகள் எனக்கு வந்து கொண்டே இருந்தது. இந்த ஒட்டுமொத்த கேள்விகளுக்கும் விடையைக் கண்டுபிடிக்க யோசித்த போது தான் அரசியல் என்று விடை கிடைத்தது.
இந்த அரசியல் எப்படிப் பட்டது. அதனை நம்மால் கையாள முடியுமா. நமக்கு செட் ஆகுமா என்ன நிறையக் கேள்விகள் பூதம் போன்று கிளம்பி வந்து கொண்டே இருந்தது. எல்லாத்தையும் வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தால் எதையும் உருப்படியாகச் செய்ய முடியாது. சில விஷயங்களை பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் இறங்கி அடித்தால் நல்லது செய்ய முடியும் என்று தோன்றியது. அதான் இறங்கியாச்சு. இனி அதைப் பற்றி யோசிக்கக் கூடாது. எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியிலும் நிதானம் இருக்க வேண்டும் என்று தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். நாம் எவ்வளவு வலிமை என்று சொல்லக்கூடாது. செயலில் காட்ட வேண்டும். அதனை நிரூபிக்க அரசியலில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறோம் என்பதி தான் ரொம்ப முக்கியம்.
அதுதான் நம்முடைய எதிரியை யார் என்பதைச் சொல்லும். இப்படியான ஒரு சரியான நிலைப்பாட்டை எடுத்து விட்டாலே நம்முடைய எதிரி யார் என்று நாம் சொல்லத் தேவையில்லை. அவர்களே முன்னாடி வந்து களமாட ஆரம்பிப்பார்கள். எதிரிகள் இல்லாத வெற்றி வேண்டுமானால் இருக்கலாம். களம் இருக்க முடியாது. அந்த களத்தில் நமது வெற்றியைத் தீர்மானிக்கக் கூடியது நம்முடைய எதிரிகள் தான். கட்சி ஆரம்பித்தபோதே பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளின் உயிர் நாதத்தை அடிப்படை கொள்கையாகக் கோட்பாடாக அறிவித்த போது உண்மையான எதிரி யார் என்பதை அறிவித்து விட்டோம்” எனத் தெரிவித்தார்.