காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழவதும் மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது என்று சென்னையில் கூட்டப்பட்ட திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி இன்று திங்கள் மாலை சிதம்பரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகள் சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடந்தது.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இளபுகழேந்தி, எம்எல்ஏ சரவணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் விஜயசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநிலக்குழு மூசா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி மணிவாசகம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கடலூர் பராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன், மதிமுக மாவட்ட செயலாளர் குணசேகரன், திராவிடர் கழக சித்தார்த்தன், மனிதநேய மக்கள் கட்சி முன்னாள் எம்எல்ஏ நாஸர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஷபிக்குர்ரஹமான், திமுக நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் மாமல்லன், பொதுக்குழு பாலமுருகன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜோம்ஸ்விஜயராகவன், அப்புசந்திரசேகரன்,விடுதலைச்சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் பாலஅறவாழி, தியாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிதம்பரம் தெற்குவீதியில் இருந்து மேலவீதி கஞ்சி தொட்டி வரை சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக மற்றும் தோழமை கட்சியினர் கைகோர்த்து நின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு, மாநில அரசுகளை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது.
பின்னர் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்ஆர்கே.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மனித சங்கிலி போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சாக்கு போக்கு சொல்லி வருகிறது. வருகின்ற தேர்தலில் தமிழக மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்றார்.