புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் அரசு மருத்துவமனை அருகே 1998 ம் ஆண்டு திராவிடர் கழகத்தால் தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டு ஆசிரியர் வீரமணியால் திறந்து வைக்கப்பட்டது.
அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியார் பிறந்தநாள் நினைவு நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செய்வதுடன் அரசியல் கட்சி தலைவர்கள் வருகையின் போதும் தேர்தல் காலங்களில் வேட்பு மனு தாக்கலின் போதும் பிரச்சாரங்களை தொடங்கும் போது பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்.
தந்தை பெரியார் இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் பெரியார் சிலை மட்டுமே மூடப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை பட்டுக்கோட்டை சாலையில் நடைபயிற்சி சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் பெரியார் சிலையின் தலை துண்டாகி கீழே விழுந்து உடைந்து கிடந்தது தான்.
இந்த தகவல் காட்டுத் தீயாக பரவியதால் திமுக, திக, காங், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் குவிந்து வருகிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் பெரியார் சிலை பரபரப்பாகவே உள்ளது.
தமிழ்நாட்டில் பெரியாரின் அடையாளங்கள் அழிக்கப்படும் முயற்சி நடப்பதாக கூறும் பெரியார் தொண்டர்கள் மேலும் கடந்த ஆண்டு புதுக்கோட்டை விடுதியில் சிலை உடைக்கப்பட்டது. தொடர்ந்த புதுக்கோட்டை நகரில் எம். ஜி. ஆரால் உருவாக்கப்பட்ட பெரியார் நினைவு தூண் கஜா புயலில் உடைந்தது என்று உடைக்கப்பட்டு கிடக்கிறது என்றனர்.
எச்.ராஜா தொடர்ந்து பெரியாருக்கு எதிராக பேசி வந்தாலும் தற்போது வேட்பாளராக உள்ளதால் பெரியார் பற்றிய பேச்சுகள் குறைந்துள்ளது என்கின்றனர்.