Skip to main content

இப்படிப்பட்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை பார்த்தது இல்லை! குடும்ப தலைவிகள் கண்டனம்

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

 

gas33



கடந்த செப்டம்பர் மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 858.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இது, முந்தைய ஆகஸ்ட் மாத விலையைக் காட்டிலும் 30.50 ரூபாய் அதிகம். இந்த நிலையில் நடப்பு அக்டோபர் மாதத்திற்கு இந்த சிலிண்டர் விலை மேலும் 58 ரூபாய் அதிகரித்து, 916.50 ரூபாயாக எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துள்ளன. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த புதிய விலை அமலில் இருக்கும்.
 

அதேபோல், டீக்கடைகள், உணவக தயாரிப்புக்கூடங்கள் போன்ற இடங்களில் வணிக பயன்பாட்டுக்காக உள்ள 19.2 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நடப்பு அக்டோபர் மாதத்தில் 1570 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 87 ரூபாய் அதிகமாகும். வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 320 ரூபாய் வரை மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடுகிறது. காஸ் சிலிண்டர்கள் விலையேற்றத்தால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 

amutha

                                                                   லியோனி அமுதா


திண்டுக்கல்லைச் சேர்ந்த லியோனி அமுதா, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 20 ரூபாய் தான் ஏற்றினார்கள். ஆனால் இந்த பிஜேபி ஆட்சி போல் மூன்று மாதம், ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஐம்பது, நூறு என ஏற்றவில்லை. இப்படி ஏற்றியே இந்த 4 1/2ஆண்டுகளில் காஸ் விலையை ஆயிரம் ரூபாய்க்கு கொண்டு வந்து விட்டார்கள். இதன் மூலம் நடுத்தர, ஏழை  மக்கள் இனிமேல் காஸ் சிலிண்டர் பயண்படுத்த முடியாத அளவிற்கு  இந்த பிஜேபி அரசு கொண்டு வந்து விட்டது.


முதலில் இலவசம், மானியம் என  சொல்லி மக்களை காஸ் வாங்க சொல்லி விட்டு, இப்ப மாணியமும், இலவசமும் இல்லை என கூறி ஒட்டு மொத்தமாக பணம் கட்டி காஸ் வாங்கி கொள்ளுங்கள் என கூறி மக்களை ஏமாற்றி விட்டதே தவிர, இந்த பிஜேபி ஆட்சி பொது மக்களுக்கு எந்த ஒரு சலுகையும் செய்யவில்லை. இப்படிப்பட்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை பார்த்ததும் இல்லை. 
 

இப்ப ஆயிரம் ரூபாய்க்கு வந்த காஸ் இன்னும் இந்த ஆட்சி முடிய ஆறு மாதத்திற்க்குள்ளேயே இன்னும்  நூறு, இருநூறு என ஏற்றி மக்களிடம் பணம் பறிப்பார்களே தவிர குறையபோவது இல்லை. ஏற்கனவே இந்த பிஜேபி ஆட்சியான மோடி அரசு  பொது மக்களுக்கு சலுகை செய்வதாக கருப்புபணத்தை மீட்டு தலா 15 லட்சம் போடுவததாக கூறி வங்கி கணக்குகளை ஆரம்பிக்க சொன்னார்கள். கடைசியில் மக்களின் வங்கி கணக்குகளில் ஒரு ரூபாய் கூட போடாமல் மோடி ஏமாற்றி விட்டார். இப்படி பொய் சொல்லியே ஆட்சி நடத்தும் பிஜேபிக்கு மக்களும் கூடிய விரைவில் சரியான பாடம் புகுட்டுவார்கள் என்று கூறினார்.
 


 

geetha

                                                                                      கீதாஇளவரசன்



''பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபோது சிலிண்டர் விலை சுமார் 350, 400க்கு தான் இருந்தது. மோடி அரசு வந்த பிறகு 2016ல் மார்ச்சில் 511 ரூபாய் வீட்டு உபயோக சிலிண்டர். இதிலே நேரடியாக வங்கிக்கே மானிய தொகை அனுப்புவதாக உறுதியளித்தார். எல்லாம் ஏமாற்று வேலையாப் போச்சிங்க. படிப்படியாக உயர்ந்து இப்போது சிலிண்டர் விலை 916 ரூபாய் 50 காசு. இது மட்டுமா சிலிண்டர் சப்ளை செய்பவர்கள் கூடுதலாக 70 ரூபாய் 80 ரூபாய் என வசூலிக்கிறார்கள். இதனால் இப்போது 1000 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்குகிறோம். இதற்க்கான மானியம் 421 ரூபாய் 79 காசு மத்திய அரசு வங்கியில் என் கணக்குக்கு செலுத்த வேண்டும். ஆனால் இப்போது எல்லாம் முறையாக மானியம் வங்கி கணக்குக்கு வருவதே இல்லை. எப்போதாவது தான் வரும் சிலமாதங்கள் வரவே வராது. நாங்கள் யாரிடம் போய் கேட்பது. இப்படி சிலிண்டரின் ஒட்டு மொத்த விலை எங்கள் கழுத்தை நெரிக்கிறது. மாதம் 200 ரூபாய்க்கு விறகு வாங்கி சமையல் செய்யலாம் போல் தோன்றுகிறது. மாதம் 800 ரூபாய் மிச்சப்படுத்த முடியும். மத்திய அரசு மீண்டும் விறகு அடுப்பெறிக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. ஒரு அரசாங்கம் சொன்ன திட்டத்தை முறையாக செய்யாமல் ஏமாற்றுகிறது. அவசர தேவைக்கும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப சீக்கிரம் சமைத்து கொடுக்க உதவியாக உள்ளதால் தான் இதை கட்டிக் கொண்டு அழ வேண்டியுள்ளது'' என்கிறார் கடலூர் மாவட்டம் பட்டூரைச் சேர்ந்த குடும்ப தலைவி கீதாஇளவரசன்.


 

mariyammal

                                                                                         மாரியம்மாள்


ஈரோட்டைச் சேர்நத மாரியம்மாள், "நானூறு ரூபாய்க்கு வாங்குன சிலின்டரை இன்னிக்கு தொள்ளாயிரம் ஆயிரம்னு மூனு மடங்கு ஏத்திப்புட்டாங்க. மானியத்தை எங்க பேங்க் அக்கவுன்ட்டுல போட்டுடுவோம்னு சொல்லி ஏமாத்துறாங்க. உழைச்ச காசுல அரிசி, பருப்பு, சிலின்டர் வாங்கி சோறு தின்கறவனுக்கு தான் இந்த கஷ்டமெல்லாம் தெரியும். மக்கள் பணத்தை கோடி கோடியா கொள்ளையடிச்சு எல்லா விலையையும் ஏத்தி ஏழைகளை நடுத்தெருவுல விடும் அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் தெரியுமா? ஊரை அடிச்சு உலையில போட்ட பாவிக" என்றார் ஆவேசமாக.

ஜீவா தங்கவேல், எஸ்.பி.சேகர், சக்தி, இளையராஜா

 

சார்ந்த செய்திகள்