குற்ற வழக்குகளில் கைதாகி சிறைச்சாலைக்கும் நீதிமன்றத்துக்கும் அலைகிறார்கள் கைதிகள். அதற்குக் காரணம் அவர்கள் செய்த குற்றச்செயல்தான். அதே நேரத்தில், கைதிகளின் முகம் பார்த்து, ஓரிரு வார்த்தைகள் ஆறுதல் கூறுவதற்காக, சிறைச்சாலைக்கும் நீதிமன்றத்துக்கும் அவர்களின் குடும்பத்தினரும் பரிதவிப்புடன் செல்வார்கள். இத்தகைய காட்சிகளை, சிறைச்சாலை முன்பாகவும், நீதிமன்ற வளாகத்திலும் அடிக்கடி காணலாம்.
நிர்மலாதேவி விவகாரத்தில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைபட்டிருக்கும் பேராசிரியர் முருகனையும், ஆய்வு மாணவர் கருப்பசாமியையும் இன்று (14-ஆம் தேதி) விருதுநகர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து, வழக்கின் மறு விசாரணையை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி மும்தாஜ்.
பேராசிரியர் முருகனைப் பார்ப்பதற்கு அரசு ஊழியரான அவர் மனைவி சுஜா வரவில்லை. ஆனால், அவரது தங்கை சுவீதா வந்திருந்தார். கோர்ட் வளாகத்தில் அங்கும் இங்குமாக ஓடினார். ஒருவழியாக முருகன் அருகில் சென்றார். அப்போது “ரிலாக்ஸா இருங்க மாமா. நம்ம மடியில் கனமில்லை. நாம தப்பு பண்ணல. ஒண்ணும் கவலைப்படாதீங்க.” என்று நம்பிக்கை வார்த்தைகள் கூறினார்.
முருகனை ஏற்றிக்கொண்டு போலீஸ் டெம்போ கோர்ட்டிலிருந்து கிளம்பியபோது, கண்ணீர் மல்க கையசைத்தார். செய்தியாளர்கள் அவரிடம் மைக்கை நீட்டியபோது, “அதான்.. ஏற்கனவே சொல்லிருக்கோம்ல. நான் இப்போது எதுவும் சொல்வதற்கில்லை.” என்றவர், “ஜாமின் கிடைத்த பிறகுதான் உண்மையான குற்றவாளி யாரென்று தெரியும். அப்போது அவரைப் படம்பிடித்துப் போடுங்க.” என்றார்.
முருகனும் கருப்பசாமியும், இனி முகத்தை மூட வேண்டிய அவசியம் இல்லை என்ற தெளிவுடன் இருந்தார்கள். ஆனாலும், அனேக நேரங்களில் அவர்களின் தலை கவிழ்ந்திருந்தது. முகத்திலும் சோகம் அப்பியிருந்தது.