சமூகக் கருத்துக்களால் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கே. அவரின் ஜெராக்ஸாக அவதாரமெடுத்தவர் சின்ன கலைவாணர் என்ற அடைமொழியால் அடையாளம் காணப்பட்ட நடிகர் விவேக். இவரது பிறப்பிடம் தென்காசி மாவட்ட சங்கரன்கோவிலில் உள்ள பெருங்கோட்டூர். அமைதிக் குணமும் ஈகைப்பண்பும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் விவேக். காலம் அவரை சென்னைக்கு அழைத்துப் பிரபலமாக்கியது.
நெல்லை மண்ணில் பிறந்து, நெல்லை மண்ணை சுவாசித்து, நெல்லை மண்ணின் நீண்ட வசனத்தை திரையில் பேசி திருநெல்வேலிக்குப் பெருமை சேர்த்த உரிமையாளன் விவேக். சங்கரன்கோவில் அருகே சரித்திரப் புகழ்பெற்ற தாய் பிறந்த பெருங்கோட்டூரில் தவமாய் பிறந்து கோவில்பட்டி மண்ணில் கோலோச்சி தெற்குச் சீமையின் தென் பொதிகைக் காற்றின் தமிழைச் சுவைத்து தன்மானம் கொண்ட தமிழனாய் என்றும் தலை நிமிர வென்றவர் விவேக்.
கூட்டணி கட்சி ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் தி.மு.க. வேட்பாளர் ராஜா அவரின் கனவான மரக்கன்றுகள் மரக்கன்றை நட்டு வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மண்ணின் மைந்தனுக்கு, மரங்களின் நாயகனுக்கு, மண்ணின் வாசிகளின் ஆழ்ந்த கண்ணீரஞ்சலி என சங்கரன்கோவில் நகரவாசிகள் திரண்டு ஆழ்ந்த இரங்கலை கண்கள் குளமாக செலுத்தியுள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு விவேக்கின் தாயார் சென்னையில் காலமானாலும், அவரின் ஜென்ம பூமியான பெருங்கோட்டூர் மண்ணிற்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார்.