ம.தி.மு.க.வின் தலைமைக் கழகச் செயலாளராக அண்மையில் கட்சியினரால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நியமனம் செய்யப்பட்ட துரை வைகோ தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டத்தின் கலிங்கப்பட்டி செல்லும் வழியில் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "வாக்கெடுப்பில் 2 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். என் மீது நம்பிக்கை வைத்து தரப்பட்ட பொறுப்பை நான் சிறப்பாகவே செய்வேன். எங்கள் குடும்பம் முழுக்க முழுக்க அரசியல் தொடர்புடையது தான். நான் என் தந்தையைப் போல சொல்லாற்றல் இல்லாவிட்டாலும், நான் கட்சிக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். அரசியலுக்கு வருவேன், பிரச்சாரம் செய்வேன் என்று கனவிலும் நான் நினைத்து பார்த்ததில்லை.
அரசியலுக்கு வருவது என்பது எனக்காக அல்ல. ம.தி.மு.க. என்ற இயக்கத்திற்காகவும், எதிர்காலம் பொருட்டும் எடுத்த முடிவு. குடும்பத்தாருடன் முழுநேரமும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அரசியலுக்கு வரவேண்டிய காலத்தின் கட்டாயம் காரணமாக வரவேண்டியதானது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் அதிகாரமிருக்க வேண்டும். எனவே வருங்காலங்களில் நான் கண்டிப்பாகத் தேர்தலில் போட்டியிடுவேன்.
இயக்கத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதே, எனக்கும், தொண்டர்களுக்குமான இலக்கு என்று அழுத்தமாகச் சொன்ன துரை வைகோ, விடுதலைப் புலிகள் ஆதரவுப் பேச்சால் என் தந்தை அமெரிக்கா உள்பட வெளிநாடு செல்ல பல நாடுகள் தடை விதித்திருக்கின்றன. அதனால் தந்தையால் 15 ஆண்டுகளாக அமெரிக்காவிலிருக்கும் என் சகோதரியைப் பார்க்க முடியவில்லை. கனடாவில் படிக்கும் எனது மகளையும் பார்க்க முடியவில்லை.
அந்த நிலை எனக்கும் வரக் கூடாது என்றும் என்னை அரசியலுக்கு வரக்கூடாது என்று என் குடும்பத்தார் சொன்னதையும் நான் ஒதுக்கிவிட்டு கட்சிக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். நான் வாழ்க்கையில் எவ்வளவோ இழந்திருக்கிறேன்" என்று சொன்ன துரை வைகோவின் கண்கள் கலங்கின.
பேட்டியின் போது ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மருத்துவரணி செ. டாக்டர் சுப்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.