
சமீபமாகவே பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவது தொடர்பாக புகார்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் சீர்காழியில் துக்க வீட்டில் சிறுமி ஒருவருக்கு பாலியல் சீண்டல் கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தம்பதி ஒருவர் தங்களுடைய நான்கரை வயது பெண் குழந்தையுடன் துக்க நிகழ்வுக்கு சென்றிருந்தனர். அப்பொழுது திடீரென சிறுமியைக் காணவில்லை. குழந்தை எங்கே என பெற்றோர்களும் அங்கு இருந்தவர்களும் தேடிக் கொண்டிருந்த நிலையில், துக்க வீட்டுக்கு அருகிலேயே இருந்த கொட்டகையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. அங்கு சென்று குழந்தையை விசாரித்த பொழுது தமிழ்வாணன் என்ற நபர் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிந்தது. இதுகுறித்து உடனடியாக சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்த நிலையில், போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர்.
துக்க வீட்டிற்கு வந்த சிறுமி பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.