
ராஜஸ்தான் மாநிலம், பீவார் அருகே பிஜய்நகர் பகுதியில் உள்ள பள்ளி மாணவிகளை சமூக ஊடகம் மூலம் சில நபர்கள் தொடர்பு கொண்டு, பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், நெருக்கமான புகைப்படங்களைப் பயன்படுத்தி மிரட்டியதாகவும், அவர்களை கட்டாய மத மாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சிறுவர்கள் உள்பட 11 பேரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் முன்னாள் கவுன்சிலர் ஹக்கீம் குரேஷியையும் போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், சிறுமிகள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் காங்கிரஸ் உள்ளது என பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ராஜஸ்தான் சட்டசபையில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ கோபால் சர்மா, “எப்ஐஆரில் 12 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் 15 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மொத்தம் 27 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அறிக்கைகளின்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு காங்கிரசுடன் தொடர்பு உள்ளது” என்று கூறினார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் பா.ஜ.க முன்னாள் தலைவர் சதீஷ் பூனியா ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பிஜைநகர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது பஜன்லால் சர்மா தலைமையிலான பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும். அஜ்மீர் பிளாக்மெயில் ஊழலில் இருந்து பிஜய்நகர் பிளாக்மெயில் ஊழல் வரை காங்கிரஸ் பின்னணியில் உள்ளது” என்று மீண்டும் குற்றச்சாட்டை வைத்தார்.