Skip to main content

'பாஜகவின் ரகசிய திட்டம்; உறுதிப்படுத்திய தமிழிசைக்கு என் நன்றி' -மு.க.ஸ்டாலின் மடல்

Published on 04/03/2025 | Edited on 04/03/2025

 

nn

'தமிழிசையின் மும்மொழி வாழ்த்தும்; பாஜகவின் பண்பும்' என்ற தலைப்பில் திமுக உடன்பிறப்புகளுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், 'என் பிறந்தநாளில் பாஜக நிர்வாகியான அன்பு சகோதரி டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் அவர்கள் எனக்கு மும்மொழியில் வாழ்த்து தெரிவித்து தன் அன்பையும், தன் இயக்கத்திற்குரிய பண்பையும் வெளிக்காட்டி இருக்கிறார். தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் இந்தி இடம் பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகின்ற உணர்வின் வெளிப்பாடு. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் அமைந்த வாழ்த்துக்கு பிறகு தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார், தெலுங்கை தாய் மொழியாக கொண்ட மாநிலத்தின் பணியாற்றியதால் பழக்கத்தின் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறார். இதிலிருந்து மூன்றாவதாக ஒரு மொழியை வழிந்து படிக்க வேண்டியது இல்லை என்பதையும், தேவைப்படுகின்றவர்கள் அதனை புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்கிற திராவிட இயக்கத்தின் கொள்கை வழிலான தமிழ்நாட்டின் உணர்வையும் எனக்கான பிறந்தநாள் வாழ்த்து பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள சகோதரி  தமிழிசைக்கு என் நன்றி.

கூகுள் ட்ரான்ஸ்லேட்,  சாட் ஜிபிடி போன்ற தொழில்நுட்பங்கள் மொழிச் சிக்கல்களை மனிதர்கள் எளிதாக கடப்பதற்கு உதவுகின்றன. ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கும் மிகுந்த பயனளிக்கும். அதற்கு பதிலாக ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்கு சுமையாகவே அமையும். உருது மொழியும், அண்டை மாநிலங்களில் பேசப்படும் தெலுங்கு, கன்னட மொழிகளும் நம்முடைய கல்விக் கொள்கையின் படி இங்குள்ள சிறுபான்மை மொழிப் பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன.

பாஜகவின் நோக்கமே தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக திணிக்க வேண்டும் என்பதுதான். தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்றால் அதற்கு காரணம் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை தானே தவிர, திமுகவினரோ வேறு எந்த கட்சியினரும் தனிப்பட்ட முறையில் காரணமாக மாட்டார்கள். அரசியல் நோக்குத்துடன் பேசும் பாஜக நிர்வாகிகள் 'இந்தி படிக்கும் வாய்ப்பு ஏழை மாணவர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை?' என்று ஏதோ தமிழ்நாட்டு ஏழை மாணவர்கள் மீது அக்கறை உள்ளது போல வேடம் போடுகிறார்கள்.

மாணவர்களின் மீது மொழி திணிப்பு என்னும் சுமையை ஏற்றால் திறன் மேம்பாடு என்கிற வாய்ப்பை வழங்குவது தான் திராவிட மாடல அரசின் கல்வித் திட்டம். தென்னிந்தியர்கள் இந்தியை கற்க தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா நிறுவப்பட்டது போல வட இந்தியாவில் தென் இந்திய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள உத்தர பாரத தமிழ் பிரச்சார சபாவையோ, திராவிட பாஷா சவாவையோ நிறுவவும் முடிந்ததா? தமிழ்நாட்டில் தற்போது ஓடும் ரயில்களுக்கு கூட இந்தி, சமஸ்கிருத பெயர்களை வைப்பார்கள் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள். தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பது தான் அவர்களின் ரகசிய திட்டம்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்