Published on 25/07/2019 | Edited on 25/07/2019
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு நபர்களுக்கு, ஊழியர்களுக்கு வழங்கிய பணத்துக்கு வரியை பிடித்தம் செய்துள்ளது. அப்படி பிடித்தம் செய்த வரித்தொகையை நிறுவனத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் வருமான வரித்துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் விஷால் செலுத்தவில்லை.
இது குறித்து வருமான வரித்துறை, விஷாலுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால், வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட எழும்பூர் நீதிமன்றம், விஷாலுக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது.