
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அடுத்துள்ள கூடார்விழா பகுதியில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு படையப்பா யானை உள்ளே புகுந்தது. உடனடியாக தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை அங்கிருந்து வெளியேற்றினர். தற்பொழுது கூடார்விழா பள்ளியில் பொதுத்தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில் இன்றும் சில காட்டு யானைகள், குட்டி யானைகள் பள்ளி மைதானத்தில் புகுந்தது.

தேர்வெழுத அங்கு காத்திருந்த மாணவர்கள் இடையே இது அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள் பொதுத்தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. உடனடியாக காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பள்ளி வளாகத்திற்குள் யானைகள் வராத அளவிற்கு பாதுகாப்பிற்கு இருக்கிறோம். நீங்கள் பயப்படாமல் தேர்வை எழுதுங்கள் என அறிவுறுத்தி உள்ளனர். அந்த பகுதியில் நிரந்தரமாக யானைகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.