தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் செல்வம் (42). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் செல்வம் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இணையதளம் மூலம் பெண் பார்க்கும் பணியை துவங்கியுள்ளார்.
அப்போது பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் செல்வத்திற்கு அறிமுகமாகி தான் உக்ரைன் நாட்டில் செவிலியராக பணியாற்றி வருவதாகவும், தற்போது அங்கு போர் நடப்பதால் செல்போன் மூலம் பேசுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இணையதளம் மின்னஞ்சல் வாயிலாக நாம் பேசலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதன்பின் அந்த பெண் தான் சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை செல்வத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் அதனைப் பெற்றுக் கொள்ளுமாறும் அந்த மின்னஞ்சல் மூலம் குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து செல்வத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் அந்த பார்சலை பெற்றுக் கொள்வதற்கு முதலில் ஒரு தொகையை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதை செல்வம் செலுத்தியுள்ளார். அடுத்ததாக அந்த பார்சலை பெறவேண்டுமென்றால் அதற்கான சான்றிதழ் பெற வேண்டும். அதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அத்தனையும் அவர் செலுத்தியுள்ளார். இப்படி சுமார் 3 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தியுள்ளார். இருந்தும் அவர் அந்த பார்சலை பெறவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதனடிப்படையில் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.