நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில், ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதே சமயம் கனகராஜின் சகோதரர் தனபால் இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பகிர்ந்து வந்தார். இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘இந்த வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபால், தன்னை தொடர்புப்படுத்திப் பேசக்கூடாது. கட்சியின் பெயருக்கும், என் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் எதிரிகளின் பின்னணியில் தனபால் பேட்டி அளித்து வருகிறார். எனவே அவர் தனக்கு, 1.10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (07.11.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்குத் தடை விதிக்கப்படுகிறது. அதோடு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை மான நஷ்ட ஈடாக எடப்பாடி பழனிசாமிக்கு தனபால் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.