தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி போன்ற மழலையர் வகுப்புகளை துவங்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் கடந்த 2014-2015 கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. போன்ற மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்படி, தற்போது மாநகராட்சியில் உள்ள 281 பள்ளிகளில் 200 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதில் கடந்த 2016 -2017 ஆம் ஆண்டில் மட்டும் 88 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்க உத்தரவிடக்கோரி மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ் மற்றும் நீதிபதி தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியில் மட்டும் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் எனவும், கல்வி பெறும் உரிமை சட்டப்படி, மழலையர் வகுப்புகள் தொடங்குவது குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து இது தொடர்பாக தமிழக அரசு 3 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.