சேலத்தில், பாலியல் தொழில் செய்யும் பெண்களோடு தனிமையில் இருந்ததுடன், பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததாக காவல்துறை எஸ்.ஐ. உள்பட நான்கு போலீசாரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.
சேலம் குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன், அதிமுக பிரமுகர். இவருடைய அடுக்குமாடிக் குடியிருப்பில் தேஜ் மண்டல் (வயது 27) என்ற இளம்பெண் வசித்துவந்தார். இவர், தனது காதலனான சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பிரதாப் என்பவருடன் சேர்ந்து சேலம் பள்ளப்பட்டி, சங்கர் நகர் ஆகிய இடங்களில் அழகுநிலையம் மற்றும் மசாஜ் மையம் ஆகியவற்றை நடத்திவந்தார்.
கடந்த அக்டோபர் 15ஆம் தேதி, பூட்டப்பட்ட வீட்டுக்குள் ஒரு சூட்கேஸ் பெட்டியில் கை, கால்கள் மடக்கிக் கட்டப்பட்ட நிலையில் தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரியவந்தது. இவர், தன்னுடைய மசாஜ் மையத்தில் வேலை செய்துவந்த ஆண் ஒருவரையும், பெண்கள் மூவரையும் தான் தங்கியிருந்த அறைக்கு பக்கத்திலேயே தனியாக ஒரு அறை எடுத்து தங்க வைத்திருந்தார்.
அவரிடம் வேலை செய்துவந்த லப்லு, நிஷி ஆகிய இருவரும் தேஜ் மண்டல் கொலைக்குப் பிறகு தலைமறைவாகிவிட்டனர். காதலர்களான அவர்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சொந்த நாட்டிற்குத் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களைத் தேடி தனிப்படை காவல்துறையினர் வங்கதேசம் விரைந்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, தனிப்படையினர் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. தேஜ் மண்டல் தனது மசாஜ் மையத்தில் அழகுக்கலை மற்றும் மசாஜ் சேவை அளிக்கும் போர்வையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது.
கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பாலியல் தொழிலை ஒழிக்கும் வகையில் சேலம் மாநகரில் உள்ள அனைத்து மசாஜ் மையங்களிலும் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தியதாகவும், பாலியல் தொழில் செய்துவந்ததாகவும் பல புரோக்கர்கள், பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், தேஜ்மண்டலும் அதே குற்றத்தில் ஈடுபட்டு வந்தாலும் கூட அவர் அப்போது கைதாகாமல் தப்பிச் சென்றுள்ளார்.
இதன் பின்னணியில் சேலம் மாநகர போலீசார் சிலர் தேஜ்மண்டலிடம் பணம் வாங்கிக்கொண்டு அவரை கைது செய்யாமல் தப்பிக்க விட்டிருப்பதும், அவ்வப்போது அவருடைய மசாஜ் மையத்தில் உள்ள பெண்களுடன் தனிமையில் இருந்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தகவல்கள், சேலம் மாநகர காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி நடத்திய விசாரணையில், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அப்போது பணியாற்றிய எஸ்.ஐ. ஆனந்தகுமார், சிறப்பு எஸ்.ஐ. சேகர், காவலர் கலைச்செல்வன், தலைமைக் காவலர் மணிகண்டன் ஆகியோர் மசாஜ் செய்யும் பெண்களுடன் தனிமையில் இருந்ததும், பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த விரிவான விசாரணை அறிக்கையை துணை ஆணையர் மாடசாமி, மாநகர காவல்துறை ஆணையரிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து, சமூக விரோத செயல்களுக்குத் துணை போனதாக எஸ்.ஐ. ஆனந்தகுமார் உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட நான்கு பேரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம், குற்றத்திற்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.