ரவுடி சி.டி.மணி, குண்டர் சட்டத்தில் அடைக்கபட்டதை எதிர்த்து அவரது தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி மணி, ஜூன் 2ம் தேதி போரூர் பாலத்தில் போலீசார் மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது துப்பாக்கி சூடு நடத்தியும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியும் தப்பிக்க முயன்றார். அப்போது, போரூர் பாலத்தில் இருந்து குதித்ததால் கால் உடைந்த அவர், கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஜூன் 26ம் தேதி மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சி.டி.மணியின் தந்தை பார்த்தசாரதி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், தன் மகனை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஆதாரங்களை பரீசிலிக்காமல் இந்த உத்தரவு பிறபிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே புதுபாக்கம் இல்லத்தில் போலீசார் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி முனையில் சி.டி.மணியை கைது செய்ததாகவும், ஆனால் போரூர் பாலத்தில் கைது செய்ததாக கதை ஜோடித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மணியை என்கவுண்டர் செய்ய தான் போலீசார் அழைத்து சென்றதாகவும், மணியை கைது செய்த நிகழ்வு ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து அந்த என்கவுண்டர் திட்டத்தை கைவிட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
புழல் சிறையில் அடைக்கபட்டுள்ள தன் மகன் சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து, அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வு, மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டது.