தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழைபொழிந்துவரும் நிலையில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று (23.10.2021) கனமழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மதுரை, சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, என 10 மாவட்டங்களிலும் இன்று கனமழை பொழியும் என்றும், வரும் 25ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இடி மின்னலுடன் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 27ஆம் தேதி வரை மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாகப் பெருந்துறையில் 9 சென்டிமீட்டர் மழையும், சாத்தனூரில் 6 சென்டிமீட்டர் மழையும், அன்னூரில் 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தற்போது சென்னை புறநகர்ப் பகுதிகளான ஆவடி, மாங்காடு, அம்பத்தூர், பூந்தமல்லி பகுதிகளில் பரவலாகக் கனமழை பொழிந்துவருகிறது.