மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா(102) உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
என். சங்கரய்யாவின் மறைவிற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, அதிமுகவின் வைகைச்செல்வன், திக தலைவர் கி. வீரமணி, திமுகவின் ஆர்.எஸ். பாரதி, சி.பி.எம் எம்பி சு. வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலைப் பதிவு செய்துள்ளனர்.
மறைந்த சங்கரய்யாவின் உடல் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து குரோம்பேட்டையில் உள்ள இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு இன்று பிற்பகல் சென்னை தி.நகர் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. நாளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தகைசால் தமிழர், முதுபெரும் பொதுவுடைமை போராளி சங்கரய்யா மறைவு செய்தி கேட்டு துடிதுடித்துப் போனேன். சங்கரய்யாவின் வாழ்க்கையும், தியாகமும் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். குறுகிய மனம் படைத்தவர்களின் சதியால் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படாதது வருத்தம். இந்திய விடுதலைப் போராட்ட வீரராகத் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில் சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.