திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள முத்தனம் பட்டி அடுத்த மல்லனம்பட்டியில் சுரபி கேட்டரிங் கல்லூரி, நர்சிங் கல்லூரி பாராமெடிக்கல் கல்லூரி உள்ளது. இதன் தாளாளராக ஜோதி முருகன் இருந்து வந்தார். மேலும் இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத்தலைவராகவும் சாதி சங்கத்தின் மாநில தலைவராகவும் இருந்து வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இக்கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வந்தனர். அப்பொழுது விடுதியின் காப்பாளராக அர்ச்சனா இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கல்லூரியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது விடுதியில் உடைமாற்றிக் கொண்டிருக்கும் பொழுது மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சக மாணவிகள் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி 300-க்கும் மேற் பட்ட மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஜோதி முருகன் கைது செய்யப்படுவார் என நினைத்த போது தலைமறைவானார்.
பின்னர் விடுதி காப்பாளர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அர்ச்சனா கைது செய்யப்பட்டதை அடுத்து மறியலில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர். பின்னர் தனிப்படை அமைத்து ஜோதி முருகனை போலீசார் தேடி வந்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் ஜோதி முருகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜோதி முருகனை போலீசார் தேடி வந்தனர். பாலியல் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்த விடுதி காப்பாளர் அர்ச்சனாவை கைது செய்தனர்.
இதனையடுத்து 23.11.2021 அன்று திருவண்ணாமலை போளூர் நீதிமன்றத்தில் ஜோதி முருகன் சரணடைந்தார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜராகி வாதாடினார். குற்றம் உறுதி செய்யப்பட்டதால் வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில் ஜோதி முருகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 75 ஆயிரம் ரூபாய் அபராதமும், விடுதி காப்பாளர் அர்ச்சனாவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25,000 அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஜோதி முருகன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்பு மீண்டும் ஜோதி முருகன் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இப்படி பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி தாளாளருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை திண்டுக்கல் கோர்ட் தீர்ப்பு வழங்கியது கண்டு திண்டுக்கல் மாவட்டம் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.