![Govt school principal broke the lock of the house and stole 50 pounds of jewelry!](http://image.nakkheeran.in/cdn/farfuture/qGbv79Hd8epcLUuAO81REmgg077vCBnsfcFuZ8mTJqI/1659377031/sites/default/files/inline-images/N283.jpg)
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, அய்யம்பாளையம் பேருந்து நிலையம் அருகே வசிப்பவர் பரமேஸ்வரி.இவர் தேவரப்பன்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பரமேஸ்வரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வெளியூர் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போய் இருந்தது. இது தொடர்பாக பரமேஸ்வரி பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்றது. வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் வீட்டின் அனைத்து பகுதிகளுக்கும் நுழைந்து அலசி தேடியுள்ளனர். நகையை கொள்ளை அடித்தவர்கள் தெம்பிற்காக அடுப்படியிலிருந்த பேரீச்சம்பழம் மற்றும் முந்திரி பருப்புகளையும் எடுத்து சாப்பிட்டு விட்டு சென்றுள்ளனர். வீட்டில் ஆள் இல்லை என்பதை அறிந்து கைவரிசை காட்டிய அந்த மர்ம நபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். தலைமை ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.