சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரதியார் அரங்கில் ஆளுநரின் ‘எண்ணித் துணிக’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நேற்று (14-11-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இளம் சாதனையாளர்களிடம் கலந்துரையாடினார்.
அதில் பேசிய அவர், ”10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்தது. ஆனால், இப்போது இந்தியா பொருளாதாரத்தில் 3வது இடத்தில் இருக்கிறது. 2008 ஆம் ஆண்டில் சீனாவில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரே ஒரு தங்கப் பதக்கத்தை மட்டும் வென்றிருந்தது. ஆனால், அந்த நிலை தற்போது இல்லை. ஒலிம்பிக் உள்பட பல போட்டிகளிலும் ஏராளமான தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை இந்தியா வாரிக் குவித்து சாதனை படைத்து வருகிறது.
2047 ஆம் ஆண்டில் உலகின் முதல் நாடாக இந்தியா இருக்கும். அதை இன்றைய சாதனையாளர்களாகிய நீங்கள்தான் சாத்தியப்படுத்தப் போகிறீர்கள். இன்றைய மாணவர்கள் தங்களது நேரத்தைச் சரியான முறையில் கையாள வேண்டும். செல்போனில் அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும். செல்போனுக்கு அடிமையாக இருக்கக் கூடாது. செல்போன் மட்டுமல்ல கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் ஆகியவற்றிலும் தேவையான நேரத்தில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் டிஜிட்டல் ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களது நிஜ வாழ்க்கையில் அவர்கள் ஸ்மார்ட்டாக இருப்பதில்லை.
மாணவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். தற்போதைய கண்டுபிடிப்பான செயற்கை நுண்ணறிவு மனிதர்களை ஆள முடியாது. அது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டதுதான். அதனால், அது குறித்து பயப்படத் தேவையில்லை. ஆனாலும், அணு ஆயுதத்தை போல் செயற்கை நுண்ணறிவும் மிகவும் ஆபத்தானது தான். அதைக் கட்டுப்படுத்த வேண்டியது நமது பொறுப்பு” என்று கூறினார்.