தமிழகத்தில் பொங்கல் திருநாள் தமிழர்கள் மத்தியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது. இதில் இயற்கையை வணங்கும் விதமாக தை 1ஆம் தேதியில் சூரிய வழிபாடு, அடுத்த நாள் விவசாயத்துக்கு உதவும் மாடுகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும் விவசாயிகளின் திருவிழாவாக ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. போகி பண்டிகையுடன் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கி இருக்கும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொங்கல் திருநாள், உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!. இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.