இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி நடைபெற்றது. முதல் நாள் கூட்டத்தொடரின் போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் உரையாற்றாமலே சிறிது நேரத்திலேயே வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடனே தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதால் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள மேல அவுரிவாக்கம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சட்டை அணிந்து கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் தொடக்கத்தில் முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “பிரதமர் மோடியின் மனதில் மீனவ சமுதாயத்தினர் இடம் பிடித்துள்ளனர். நான், பிரதமரைச் சந்திக்கும் போதெல்லாம் மீனவர்களின் பிரச்சனையை எடுத்துக் கூறுகிறேன்” எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“ஆளுநர் ரவி , திருவள்ளூர் மாவட்டம், மேலவுரிவாக்கம் மீனவர் கிராமத்தில் மீனவ சமூகத்தினருடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினார். கடினமான வாழ்க்கை மற்றும் பெரும் ஆபத்துகள் நிறைந்த அவர்களின் தொழிலைப் பாராட்டிய ஆளுநர், நாட்டின் வளர்ச்சியில் மீனவ சமூகத்தின் குறிப்பிடத்தக்கப் பங்கை எடுத்துரைத்தார். பிரதமர் மோடி, மீனவ சமூகத்தின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையையும், அவர்களின் நலனில் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் ஆளுநர் கோடிட்டுக் காட்டினார்.
ஆளுநர், முன்பைவிட அதிக வாய்ப்புகள் உள்ளதால் சமூகத்தின் இளைஞர்கள் பெரிய கனவுகளைக் காணவும், அவற்றை நிறைவேற்றக் கடினமாக உழைக்கவும் ஊக்குவித்தார். அதோடு ஆளுநர், மீனவ சமூகத்தினருடன் பொங்கல் வாழ்த்துக்களை அன்புடன் பரிமாறிக் கொண்டு, அவர்களுக்குப் பொங்கல் பரிசுகளையும் வழங்கினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.