தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வரும் 14 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக நேற்று முன்தினம் (10/01/2025) முதல் நாளை (13/01/2025) வரை, சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன், 5 ஆயிரத்து 736 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 14 ஆயிரத்து 104 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று பிற ஊர்களிலிருந்து இந்த 4 நாட்களுக்கு 7 ஆயிரத்து 800 சிறப்புப் பேருந்துகள் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 904 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 15/01/2025 முதல் 19/01/2025 வரையில், தினசரி இயக்கக் கூடிய 10 ஆயிரத்து 460 பேருந்துகளுடன் 5 ஆயிரத்து 290 சிறப்புப் பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6 ஆயிரத்து 926 என ஆக மொத்தம் 22 ஆயிரத்து 676 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையின் சார்பில், பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் நேற்று (11.01.2025) நள்ளிரவு 12.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2 ஆயிரத்து 92 பேருந்துகளும் 2 ஆயிரத்து 15 சிறப்புப் பேருந்துகளும் ஆக 4 ஆயிரத்து 107 பேருந்துகளில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 885 பயணிகள் பயணம் செய்தனர். கடந்த 10.01.2025 முதல் 11.01.2025 இரவு 12.00 மணி வரை 7 ஆயிரத்து 513 பேருந்துகளில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 215 பயணிகள் பயணித்துள்ளனர் என அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.