இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகித்து வருபவர் சோம்நாத். இவரின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். திருவனந்தபுரத்தின் வலியமலாவில் உள்ள திரவ உந்து அமைப்புகள் மையத்தின் (L.P.S.C.) எல்.பி.எஸ்.சி.யின் இயக்குநராக தற்போது பணியாற்றி வருகிறார். வரும் 14ஆம் தேதி இஸ்ரோவின் 11வது தலைவராக வி. நாராயணன் பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் இஸ்ரோ தலைவராகப் பதவி ஏற்க உள்ள வி. நாராயணன் கன்னியாகுமரி மாவட்டம் மேலக்காட்டுவிளை என்ற இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், “சொந்த உழைப்பால் இந்த உயரத்தை அடைந்துள்ளேன். அப்பாவும், அம்மாவும் கஷ்டப்பட்ட நிலையில் இருந்தாலும் பிள்ளைகள் நன்றாகப் படித்து வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பெற்றோர்கள் படிக்க வைத்தனர். மனைவி மற்றும் மக்கள் எனக்காக நிறையத் தியாகங்கள் செய்துள்ளனர். அலுவலகத்தில் நிறைய நேரம் இருக்க வேண்டி வரும். இது போன்ற நேரங்களில் அதனை ஏற்றுக்கொண்டு குடும்பத்தினர் தியாகங்கள் செய்துள்ளனர்.
இஸ்ரோ என்பது இரு பெரிய அமைப்பு ஆகும். இதனை விக்ரம் சாராபாய், சதீஷ் தவான் யூ. ஆர். ராவ், கஸ்தூரி ரங்கன், கிரேன்குமார், ராதாகிருஷ்ணன், சிவன் போன்ற மிகப்பெரிய தலைவர்கள் வழிநடத்தியுள்ளனர். இவர்கள் இஸ்ரோவுக்காக நிறையப் பங்களிப்பு செய்துள்ளனர். அதிலும் கிரேன் குமாரை நடமாடும் அறிவார்ந்த பெட்டகம் என்றே சொல்லலாம். இது போன்ற பெரிய திறமைசாலிகளும் நல்லவர்களும் பங்களிப்பு செய்த அமைப்பில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக இறைவனுக்கும் பிரதமருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இந்த நாடும் தேசமும் இஸ்ரோ அமைப்பே பெரியது என்று நினைக்கிறது. அனைவரும் கஷ்டப்பட்டு வேலை செய்வோம். இது கூட்டு முயற்சியாகும்.
கோயிலிலும், சொந்த ஊர் மக்களிடமிருந்தும் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டேன். எந்த குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறோம் என்பது முக்கியமில்லை. எப்படி படிக்கிறோம் என்பது தான் முக்கியம். படிப்பது மட்டும் முக்கியமில்லை. முழுமையான ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது ரொம்ப முக்கியம். படிப்பில் இரண்டு வகை உண்டு. வாழ்க்கை திறன் கல்வி ஒன்று அறிவார்ந்த கல்வி மற்றொன்று ஆகும். அறிவார்ந்த கல்வி என்பது நம் படித்து மதிப்பெண் பெறுவது ஆகும்.
வாழ்க்கை திறன் கல்வி என்பது இந்த சமூகத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும் மற்றவர்களுக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதாகும். இந்த இரண்டு கல்வி முறையும் சேர்த்து மாணவர்கள் கற்க வேண்டும் பெரிய குறிக்கோளுடன் படிக்க வேண்டும். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவை செய்யக்கூடிய எண்ணத்துடன் படிக்க வேண்டும். நமது நாட்டில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. சுதந்திரம் அடைந்த 76 ஆண்டுகளில் நிறைய வளர்ச்சியைக் கண்டுள்ளோம். இந்த நாட்டை இன்னும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டும்” எனப் பேசினார்.