சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத், நேற்று ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட சில கட்சி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் மாளிகையும் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளது.
நேற்று நிகழ்ந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், கருக்கா வினோத் என்பவர் ஏற்கனவே தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்திருந்தது.
இந்நிலையில், இவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ரவுடி கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நவம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் இன்று (26.10.2023) காலை 06.30 மணியளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், ராஜ்பவன் தாக்குதல் புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக் குறிப்பில், 'ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாகப் பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசக்கார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது. அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது' எனக் காவல்துறை மீது ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.