தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இன்ஜினியரிங் பட்டதாரி வாலிபர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. கோகுல்ராஜின் தாய் சித்ரா சாட்சியம் அளித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் & சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். ஆரம்பத்தில் தற்கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், பிரேத பரிசோதனைக்குப் பிறகு கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ், அவருடைய சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்கிற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் அப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜோதிமணி (40) பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருந்தார். அப்போது சொத்துப் பிரச்னையில் ஜோதிமணியை அவருடைய கணவர் சந்திரசேகர் கடந்த 7.2.2018ம் தேதி சுட்டுக்கொன்று விட்டார்.
இது ஒருபுறம் இருக்க, கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா, கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி அவருடைய முகாம் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்றும் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு ஆகிய இரண்டையும் விசாரிக்கும் பொறுப்பு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், விஷ்ணுபிரியா வழக்கு மட்டும் சிபிஐ போலீசாருக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யுவராஜ், கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த ஜாமின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜின் நீதிமன்ற காவலை, விசாரணை நீதிமன்றமான நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் காணொலி காட்சி வாயிலாக நீட்டித்து வந்தது. இது ஒருபுறம் இருக்க, யுவராஜை பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை 18 மாதங்களுக்குள்¢ விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த 10.10.2017ம் தேதி உத்தரவிட்டது. அதுவரை எந்த நீதிமன்றமும் யுவராஜிக்கு பிணை வழங்கக்கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து யுவராஜ் திருச்சி மத்திய சிறையிலும், கார் ஓட்டுநர் அருண் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த இருவர் மற்றும் சுட்டுக்கொல்லப்பட்ட ஜோதிமணி ஆகிய மூவரையும் தவிர மற்ற 14 பேரும் பிணையில் விடுதலை ஆகியிருந்தனர். இந்த 14 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.ஹெச். இளவழகன் அழைப்பாணை அனுப்பி இருந்தார்.இவர்களில் அமுதரசு என்பவரை தவிர மற்ற 13 பேரும் கடந்த ஜூன் 7ம் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை உத்தரவு பெற்றிருந்த செல்வராஜ் தவிர 12 பேரின் பிணையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கடந்த 11ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது அவர்கள் மீது குற்ற வரைவு சுமத்தப்பட்டது. அப்போது குறுக்கிட்ட யுவராஜ், கொலை வழக்கு தொடர்பாக முழுமையான ஆவணங்கள் தராமல் குற்ற வரைவு சுமத்தக்கூடாது என நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து நீதிபதி இளவழகன், ஆகஸ்ட் 30ம் தேதி (இன்று) முதல் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும் என்றும் உத்தரவிட்டார்.
அதன்படி கோகுல்ராஜ் கொலை வழக்கின் சாட்சிகளிடம் இன்று (வியாழக்கிழமை) விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் கோகுல்ராஜின் தாய், சகோதரர், தோழி என மொத்தம் 110 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் அமுதரசு தவிர மற்ற 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். முதல் நாளான இன்று கோகுல்ராஜின் தாய் சித்ரா, நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். கொலை செய்யப்பட்ட அன்று கோகுல்ராஜ் அணிந்திருந்த உடைகளைக் காட்டி அவரிடம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் உறுதிப்படுத்திக் கொண்டார். இதையடுத்து விசாரணையை வரும் 1.9.2018ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.
அன்று முதல் யுவராஜ் தரப்பிலும் குறுக்கு விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி கூறினார். விசாரணை நேரம் முன்கூட்டியே எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.சாட்சியம் அளிக்க வந்த கோகுல்ராஜின் தாய் சித்ரா, விசாரணை அரங்கத்திற்குள் நுழைந்தபோது குற்றம் சாட்டப்பட்டுள்ள யுவராஜ் உள்ளிட்டோரை பார்த்து, ஆபாச வார்த்தைகளால் திட்டினார். சாட்சி கூண்டில் நின்று பதில் அளித்த அவர் மகனை நினைத்து பலமுறை நெஞ்சில் அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.
மதியம் 1.05 மணிக்கு தொடங்கிய விசாரணை, 1.40 மணி வரை நடந்தது. உணவு இடைவேளை முடிந்து, 2.50 மணிக்கு மீண்டும் விசாரணை ஆரம்பமானது. கோகுல்ராஜின் தாய் உள்ளே நுழைந்தபோது அவரிடம் நீதிபதி இளவழகன், காலையில் இன்று நீங்கள் வந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பார்த்து பேசிய முறை சரிதானா?. இந்த இடத்தில் வந்து அவ்வாறு பேசலாமா? உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசுங்கள். இனிமேல் அப்படி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மென்மையாக கடிந்து கொண்டார். அதற்கு சித்ரா, அவரைப் பார்த்து, இருகரங்களைக் கூப்பியபடி, 'இனிமேல் அப்படி பேசமாட்டேன் அய்யா மன்னித்து விடுங்கள் அய்யா...' என்றார். என்று கேட்டார்.
அப்போது அவரிடம் சம்பவத்தன்று கோகுல்ராஜ் அணிந்திருந்த உடைகளைக் காட்டி, அடையாளம் காட்டுமாறு கூறினர். ரத்தக்கறை படிந்த ஜீன்ஸ் பேன்ட், சட்டை, உள்ளாடை, பனியன் ஆகியவற்றைப் பார்த்ததும் தாள முடியாமல் மீண்டும் நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு கதறி அழுதார். மேற்கொண்டு அவரால் பேச முடியவில்லை.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த அவரை கொஞ்ச நேரம் வெளியே அழைத்துச் செல்லுங்கள் என்றார் நீதிபதி. பெண் போலீசார் சித்ராவை அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் சாட்சி கூண்டுக்கு வந்த சித்ராவிடம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசுங்கள். உடைகளைப் பார்த்து இன்றே உறுதி செய்கிறீர்களா? அல்லது வேறு ஒரு தேதியில் சொல்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு சித்ரா வேறு ஒரு தேதியில் சொல்கிறேன் என்றார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் செப். 1ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். மாலை 3.05 மணிக்கு விசாரணை முடிந்தது.
நீதிமன்றத்திற்கு வெளியே யுவராஜ் தரப்பினரைப் பார்த்து கோகுல்ராஜ் உறவினர்கள் ஏதேதோ ஆவேசமாக பேசினர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதேபோல், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட யுவராஜ் ஆதரவாளர்களும் வந்திருந்தனர்.கோகுல்ராஜ் தரப்பில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் உதவி மாவட்ட வழக்கறிஞருமான பி.கருணாநிதி ஆஜராகி சாட்சியிடம் விசாரணை நடத்தினார்.
யுவராஜ் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ, எல்.ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் பாரிவேலன், ராமகிருஷ்ணன், பிரேம்குமார், உடுமலை ராஜேந்திரன், சேலம் அரவிந்த் ஆகியோர் ஆஜராகினர். வரும் செப். 1ம் தேதி முதல் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணைகளும் நடக்கும் என்பதால் இந்த வழக்கு விசாரணை மேலும் பரபரப்பு கட்டத்தை நோக்கி நகரும் எனத்தெரிகிறது.