அண்மையில் ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையைத் தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் 16 வயது சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை, இடைத்தரகர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்புத் தந்தையிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறுமியின் தாய் அவரது மகளுக்கு 3 வயது இருக்கும் போதே கணவனைப் பிரிந்து சையத் அலி என்ற பெயிண்டர் உடன் வாழ்ந்து வந்துள்ளார். சிறுமி 12 வயதில் பருவமடைந்த உடனே கருமுட்டை விற்பனைக்குப் பயன்படுத்தியுள்ளார். வளர்ப்புத் தந்தை சையத் அலி சிறுமியின் தாய் துணையுடன் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதும், கருமுட்டையை விற்பனை செய்ய உதவியதும் தெரிய வந்தது. இப்படிப் பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையைத் தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்வதை இவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில மருத்துவமனைகளிலும் சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்டிருக்கலாம் என விசாரணை வெளி மாநிலங்களுக்கும் நீண்ட நிலையில் விசாரணை அறிக்கையை மருத்துவக்குழு அரசுக்கு கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''நிர்ப்பந்தம் செய்து 16வயது சிறுமியிடம் இருந்து பலமுறை கருமுட்டையை அவரது குடும்பத்தினரே எடுத்து விற்றுள்ளனர். தானம் தர விரும்பினாலும்21 வயதான ஒருவரிடம் இருந்துதான் கருமுட்டையை எடுக்க முடியும். கருமுட்டை விற்பனையில் ஈடுபட்ட ஈரோடு, சேலத்தில் செயல்பட்டு வரும் சுதா, ஓசூர் விஜய்,பெருந்துறை ராம்பிரசாத் என நான்கு தனியார் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நான்கு மருத்துவமனைகளிலும் உள்ள நோயாளிகள் 15 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும்.கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒரு மருத்துவமனை, ஆந்திராவில் ஒரு மருத்துவமனை என மொத்தம் 6 மருத்துவமனைகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது'' என்றார்.