![The girl complained to the collector in Nagapattinam](http://image.nakkheeran.in/cdn/farfuture/ylRCQfWd5Y4A_veVB7wrxpoGbbPAnBEBj7wNWnzuhGU/1685339329/sites/default/files/inline-images/th_4261.jpg)
“எங்க மாமா இடி விழுந்து இறந்தபோது கூட யாரும் தூக்க கூடாதுன்னு கட்டளை போடுறாங்க, சாவுக்கும் வாழ்வுக்கும் போக கூடாதுன்னு அடிக்கிறாங்க. இந்த அடக்குமுறையில் இருந்து நீங்கதான் எங்களை காப்பாத்தணும்” என தூர்வாரும் பணியை ஆய்வு செய்ய வந்த ஆட்சியரிடம் எதார்த்தமாக கூறினார் 5 ஆம் வகுப்பு மாணவி.
நாகை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜானி டாம் வா்கிஸ் முதல் நாளே பெருங்கடம்பனூர் ஊராட்சியில் தேவநதி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்கு சென்றார். அப்போது ஆட்சியர் ஆய்வுக்கு வருவதை அறிந்த சிறுமி ஒருவர் ஆட்சியருக்காக வாய்க்கால் மதகடியில் காத்திருந்தார். ஆட்சியர் வந்ததும் அவருக்கு சால்வை அணிவித்து தான் கொண்டு வந்த மனுவை அளித்தார்.
தொடர்ந்து ஆட்சியரிடம் பேசிய சிறுமி, “நற்பணி கழகம் வச்சிருக்கவங்க வாழ்வுக்கும், சாவுக்கும் எங்களை போக கூடாதுன்னு கட்டளை இடுறாங்க. எங்க மாமா இடி விழுந்து இறந்தபோது அவங்களை யாரும் தூக்க கூடாதுன்னும் கட்டளை போடுறாங்க. சாவுக்கும், வாழ்வுக்கும் போக கூடாது அப்படி மீறி போன அடிப்போம்னு சொல்லியே அடிக்கிறாங்க. அத நீங்கதான் சரி பண்ணணும் கலெக்டர் அய்யா” என்று கோரிக்கை வைத்தார்.
இதனைக் கேட்ட ஆட்சியர் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதோடு மாணவியிடம் எந்த ஸ்கூல் படிக்கிறீங்க, எந்த வகுப்பு படிக்கிறீங்க, உங்க பேரென்ன, இப்ப ஸ்கூல் லீவா என்று ஆட்சியரும் குழந்தையாக மாறி கனிவோடு விசாரித்தார்.
அந்தச் சிறுமி அளித்த புகார் மனுவில், ‘நாகை மாவட்டம் பெருங்கடம்பனூர் பகுதியில், நற்பணி கழகம் எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் இருந்து சோமசுந்தரம் விலகியதால் அவர் குடும்பம் உட்பட மூன்று குடும்பங்களை அந்த அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறது. மேலும், அந்த அமைப்பு, ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள குடும்பங்களோடு யாரும் பேசக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளது. உறவினர் மரணத்திற்கு கூட அனுமதிக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.