செஞ்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஏரிக்கரைக்கு சென்றபோது, மர்ம வெடி வெடித்ததில் அவரது கால் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகத்தின் மகன் இளம்பரிதி (17). சண்முகம் மற்றும் அவரது மகன் இருவரும் நேற்று முன்தினம் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கம்பு அறுவடை செய்து கொண்டிருந்தனர். அறுவடை முடிந்து மாலை 5 மணியளவில் வீட்டுக்கு திரும்பும் வழியில் அருகில் இருந்த மட்டப்பாறை ஏரிக்கரை பகுதிக்கு சென்றுள்ளார், இளம்பரிதி.
அங்கே உருண்டையாக கிடந்த ஒரு பொருளை தனது வலது காலால் விளையாட்டுத்தனமாக ஓங்கி மிதித்துள்ளார். அப்போது அந்த உருண்டைப் பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்ததில் இளம் பரிதியின் கால் படுகாயமடைந்தது. அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அனந்தபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மட்டப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார அப்பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் விவசாயிகளின் விளைபொருட்களை நாசம் செய்கின்றன. அதை கட்டுப்படுத்த கண்ணிவெடி போன்ற நாட்டு வெடியைத் தயாரித்து விளைநிலங்களுக்கு அருகில் வைத்திருந்திருக்கலாம். அதை பின்னர் அப்புறப்படுத்தாமல் இருந்துள்ளனர், அதுவே சிறுவனின் காலைப் பதம் பார்த்துள்ளது. இதுகுறித்து அனந்தபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.