புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதத்திலிருந்து நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல ஊர்களிலும் வர்த்தக சங்கங்கள் கடைகளை மூடி வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சரின் புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனாவுக்காக சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கந்தர்வகோட்டை அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நார்த்தமலை ஆறுமுகத்திற்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு வியாழக்கிழமை காலை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். தனி வார்டில் அனுமதித்து மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சை அளித்துவந்த நிலையில் மாலை அங்கிருந்து வெளியேறி திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரோனாவுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டுகளை உருவாக்கி, அதைக் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கொண்டு திறந்துவைத்தார். அந்தச் சிறப்பு வார்டில் எம்.எல்.ஏ ஆறுமுகத்திற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறி தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளது பொது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.