![Free Coaching for Central Govt Group B, Group C Job Exam; Oct. Start at 11!](http://image.nakkheeran.in/cdn/farfuture/0oXFn1k6wA3Bo4C8DAGuOs8YmbPEkJT_y6NFr8Rjj6Y/1665369003/sites/default/files/inline-images/sa1_3.jpg)
மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 'குரூப் பி' மற்றும் 'குரூப் சி' பணிகளுக்கான போட்டித்தேர்வுக்கு இலவச வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக். 11- ஆம் தேதி தொடங்குகிறது.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்சி) 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவு பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இத்தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 01.01.2022 அன்று வயது வரம்பு எஸ்சி., எஸ்டி., பிரிவினருக்கு 35 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 33 வயதுக்குள்ளும் மற்றும் பொதுப்பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
மேலும், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கட்டணம் 100 ரூபாய். பெண்கள், எஸ்சி., எஸ்டி., பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் அதிகளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அக். 11- ஆம் தேதி இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0427- 2401750 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.