Skip to main content

மாற்றுத்திறனாளிகள் திட்டங்களில் முறைகேடு! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

Abuse in the programs of the disabled! Request to take action !!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், ஒட்டன்சத்திரம் வட்டார மாற்றுத்திறனாளிகள் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராகவும், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறார். 


இவர் தலைமையின் கீழ் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் குழுக்களின் சார்பாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தனிநபர் கடன்கள் பெற்று வந்துள்ளனர். இதற்கான மாதாந்திர கடன் தொகையை மாதந்தோறும் செலுத்தி வந்துள்ளனர். இந்த சுய உதவிக்குழு பயிற்றுநராக மகுடீஸ்வரி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர், குழுக்களின் மூலம் கட்டப்படும் கடன் தொகையை வரவு வைக்காமல் கட்டிய பணத்தை விட குறைந்த கணக்கை காட்டி ரசீது கொடுத்துள்ளார். 

 

இதனால் ஜனவரி 5ம் தேதி கார்த்திகேயன் குழுக்களைச் சேர்ந்தவர்கள் கடன் தொகையை முழுமையாக செலுத்தி கடனை முடித்து கொடுக்கும்படி கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு முழுமையான ரசீது தராமல் உரிய பதில் தராமல் இருந்துள்ளனர். இதுகுறித்து மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஒட்டன்சத்திரம் வட்டார மேலாளர் பிரியா என்பவரிடம் பல முறை புகார் செய்துள்ளார். ஆனால் இது குறித்து வட்டார மேலாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் புகார் செய்ததால் இவர்களுக்கு  வரவேண்டிய எந்த ஒரு அரசும் நலத்திட்டங்களும் முறையாக தகவல் தெரிவிப்பதில்லை, வட்டார மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி ஆகியோர்  குழுக்களின் சார்பாக கொடுக்கப்படும் கடன் விண்ணப்பங்களை தர மதிப்பீடு செய்யாமல் நிராகரித்து கையூட்டு கேட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கின்றனர். மேலும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதியாக இருக்கும் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுக்காமல் கூட்டங்கள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி அரசின் நலத்திட்டங்களில் முறைகேடு செய்து வருவதாக கூறப்படுகிறது. 


ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் துவங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குழுக்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித செயல்பாட்டிலும் இல்லை. எனவே, இதுபோன்ற பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து செய்து வரும் வட்டார மேலாளர் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒட்டன்சத்திரம் பகுதியில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களில் பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து செய்து வரும் வட்டார மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், பயிற்றுனர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கார்த்திகேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்