சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இன்று (05/07/2022) காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், "நமது அம்மா நாளிதழில் பல்வேறு முறைகேடுகள் செய்ததால் வேலையில் இருந்து நீக்கப்பட்டவர் மருது அழகுராஜ். நமது அம்மா நாளிதழ் விளம்பர தொகைகளில் கையாடல் செய்தவர் மருது அழகுராஜ். கட்சிக்கும், மருது அழகுராஜுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? அ.தி.மு.க.வின் ஒற்றைத் தலைமையாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்க 98% தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் கட்சி விரோத நடவடிக்கைகளை மருது அழகுராஜ் மனச்சாட்சியுடன் தெரிவித்திருக்க வேண்டும்.
சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது என தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் தற்போது மாற்றி பேசுவதை ஏன் மருது அழகுராஜ் கேட்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பாராட்டியதை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்கவில்லை. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்நாள் முழுவதும் தி.மு.க. எதிர்ப்பு கொள்கையைக் கடைப்பிடித்தனர். அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுடன் கைகோர்த்து செயல்படுகிறார். தனி மரம் எப்போதும் தோப்பு ஆகாது.
திட்டமிட்டபடி வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்போது தி.மு.க. ஆட்சியில் நிகழ்ந்த மரணங்கள் குறித்து விசாரித்து உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க.வினர் தி.மு.க. மீது பொய் வழக்குகளை போடுகிறது.
தி.மு.க.வின் 'பி' டீமாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். கட்சியை முடக்கும் எண்ணத்தில் தி,மு.க.வின் 'பி' டீமாக செயல்படுபவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.