Published on 05/10/2019 | Edited on 05/10/2019
நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய மூன்று படத்திற்கு பிறகு நான்காவது படமாக வெளிவந்திருக்கும் படம் அசுரன். இந்த படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளி வந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை மையமாக வைத்து வெளிவந்துள்ளது. வெக்கை நாவலில் சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளது.
அதே போல் அசுரன் படத்திலும் சாதி ரீதியான அடுக்குமுறைக்கு எதிராக வசனங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அசுரன் படம் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து மிக தீவிரமாக பேசியுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பாராட்டியுள்ளனர். மேலும் விடுதலை கட்சி சார்பாக வன்னியரசு இயக்குநர் வெற்றிமாறனைச் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அவருக்கு புத்தர் சிலையை பரிசாக அளித்தார். மேலும் அசுரன் படம் குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் வன்னியரசு பதிவு ஒன்றையும் போட்டுள்ளார். அதோடு பல்வேறு சினிமா விமர்சகர்கள் அசுரன் படத்தை புகழ்ந்து பேசிவருகின்றனர்.