தோட்ட காவலாளி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை கும்பகோணத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்தார். இந்நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் காவலாளியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மோகன்ராஜும் கார்த்தியும் இணைந்து தோட்டத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
அப்பொழுது கார்த்தியின் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. இதில் காயமடைந்த கார்த்திகை மீட்ட மோகன்ராஜ், பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தார். அதன் பின்னர் கார்த்திக் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை செய்ததில் அங்கு 16 துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. தற்பொழுது வரை இந்த சம்பவத்தில் முழு விவரம் தெரியாத நிலையில், தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.