!['Finishing work is bad' - IIT study on KP Park housing quality!](http://image.nakkheeran.in/cdn/farfuture/_3kx_z7eL5A388ChGr6-EiqXvr8JhyF6Yd1MQHd-Sv0/1635432642/sites/default/files/inline-images/z121.jpg)
சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் கட்டிடத்தின் பூச்சு வேலை மோசமாக உள்ளதாக ஐஐடி அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பில் கட்டிடத்தின் சுவர்கள் மிக மோசமாக இருந்ததும், சிமெண்ட் பூச்சுகள் தொட்டவுடன் உதிர்வதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்காக தற்போதைய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஐஐடி குழுவிற்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு முன்பு 'கியூப்' நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் தேவையான அளவான 70 சதவீதத்திற்குக் குறைவாக சிமெண்ட் இருந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்பொழுது ஐஐடி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது, அதில், 'பூச்சு வேலை மோசமாக உள்ளது. டைல்ஸ் கற்கள் சரியாகப் பொருத்தப்படாமல் இருக்கிறது. மோட்டார்கள், மீட்டர் போர்டுகள் மற்றும் மின்சார இணைப்பு சார்ந்த சாதனங்களிலும் குறைபாடு உள்ளது. டைல்ஸ் கற்கள் சரியாகப் பொருத்தப்படாததால் சுவர்கள் எளிதில் தண்ணீரை உறிஞ்சி விழுந்து விடலாம். சரியான கால இடைவெளியில் கட்டிடத்திற்குத் தேவையான பராமரிப்பு வேலைகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும். கட்டடத்தை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றி அங்கு வசிக்கும் மக்களுக்குக் கற்றுத்தர வேண்டும்' என்ற பரிந்துரையையும் ஐஐடி குழு வழங்கி உள்ளது.