மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி பல நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், விவசாய இயக்கங்களும் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இன்று, சென்னையில் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
சைதாப்பேட்டை, சின்னமலை பகுதியில் இருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது பேசிய பி.ஆர்.பாண்டியன், "இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று 25 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். மத்திய அரசு இதனைப் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தையும் மத்திய அரசு மதிக்கவில்லை. இந்தச் சட்டத்தால் நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படும். இது முழுக்க முழுக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவானது. அவர்கள் சுயநலம் சார்ந்த சட்டமாக இது உள்ளது.
அதனால் இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். எங்களைக் கைது செய்தாலும் போராட்டம் தொடரும்.” என்று தெரிவித்தார்.