![Farmers' Association offers consolation to farmers](http://image.nakkheeran.in/cdn/farfuture/Rr_S0D8pqKbrAFa1lDwHgJC9fztw8Zu6ZTGlbIuQnJs/1638362283/sites/default/files/inline-images/farmers-asso.jpg)
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழமணக்குடி, பூவாலை, அருள்மொழிதேவன், சின்னாண்டிகுப்பம், மணி கொள்ளை, அம்பாள்புரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில் மூழ்கி வீணாகும் சூழல் உள்ளது.
பாதிக்கப்பட்ட நெல்வயல்களைத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட துணைத்தலைவர் கற்பனை செல்வம், ஒன்றியச் செயலாளர் கொளஞ்சி உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அழுகிய பயிர்களைப் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்கள்.
இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர்கள் கற்பனை செல்வம், கொளஞ்சி இருவரும் கூறுகையில், “இந்தப் பகுதியில் தற்போது பெய்த மழையால் நெற்பயிர்களில் பச்சை பிடிக்கும் நேரத்தில் ஒருவார காலத்திற்கு மேல் தண்ணீரில் மூழ்கி இருந்துள்ளது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வடியும் தருவாயில் இருந்தாலும், தண்ணீர் வடிந்தவுடன் அனைத்து பயிர்களும் மடிந்துவிடும். தற்போது தண்ணீர் நிற்க்கும்போது பச்சை பசேலென்று இருக்கும் பயிர்கள் காய்ந்துவிடும்.
அப்படியே பயிர்கள் வளர்ந்தாலும் மகசூல் கிடைக்காது. எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களைக் கணக்கில் எடுத்து ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை இறப்பிற்கு கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்” என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளனர்.